தமிழ்நாடு

விமானங்கள் தாமதம், ரத்தால் இழப்பீடு தருவதாக பயணிகளிடம் நூதன மோசடி- அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2024-12-23 07:08 GMT   |   Update On 2024-12-23 07:08 GMT
  • மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம்.
  • போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக மோசமான வானிலை, புயல் மற்றும் கனமழை காரணமாக பல விமானங்கள் தாமதம், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் தற்போது புதுவிதமாக பாதிக்கப்பட்ட விமான பயணிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விமான பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றிற்கு இழப்பீடுகள் தருவதாக கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு சுருட்டி வருகின்றனர்.

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமான பயணிகளிடம் நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆனதற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்கப் போவதாக, போலியான செல்போன் அழைப்புகள் மூலம், பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். அதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

அதைப் போன்ற இழப்பீடுகள் கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே இதைப் போன்ற போலியான செல்போன் அழைப்புகள் வந்தால், பயணிகள் யாரும் அதை நம்ப வேண்டாம்.

பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்கள் பயணிக்க இருந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டு அறிந்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் பயணிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, இந்த போலி மோசடி கும்பல் குறித்து போலீசிலும் புகார் தெரிவித்து உள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News