தமிழ்நாடு

நம்பிக்கை துரோகம் யார் செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2025-02-24 13:27 IST   |   Update On 2025-02-24 13:27:00 IST
  • மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம்.
  • தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது.

சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வாரியம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. உச்சத்தில் இருந்தது, அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு ஒற்றை தலைமையே காரணம், நம்பிக்கை துரோகம் யார் செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும்.

சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம். துரோகத்தினால் கடைசியாக நடைபெற்ற 11 தேர்தல்களிலும் ஊரக உள்ளாட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் தோல்வி பெற ஒற்றைத் தலைமை தான் வேண்டுமென்று அடம்பிடித்தது தான் காரணம்.

மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம். எங்கள் வாய் நல்ல வாய். அவர்கள் வாய் என்னவாய் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தமிழக மக்கள் இருமொழி கொள்கையை தான் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அண்ணாவும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோதும் அதைத்தான் பின்பற்றினேன். அதேபோல இரு மொழிக் கொள்கைதான் எங்களுடைய நிலைப்பாடும்.

தமிழகத்தில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைகளும் பிறந்தவுடனே தமிழ் மொழியில் தான் அம்மா என அழைக்கிறார்கள், தாய் மொழி தமிழ், விருப்பப்பட்டவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். படித்துக் கொள்ளலாம் என அண்ணா கூறியுள்ளார். தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது.

தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மாநில அரசின் அனுமதியின்றி தொடங்கிக் கொள்ள ஒன்றிய கல்வி இடைநிலை வாரியம் அறிவித்தது தொடர்பான கேள்விக்கு தாய்மொழி தமிழ் கட்டாயம் விருப்பப்பட்டவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News