தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் தகுதியான கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-12-11 11:55 IST   |   Update On 2024-12-11 11:55:00 IST
  • மாநிலத்தின் செலவைக் குறைக்க தி.மு.க. அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
  • தகுதியான ஆசிரியர்களை நியமித்து கணினி அறிவியலை போதிக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நிதியின் மூலம் கணினி அறிவியல் பாடத்திற்கென்று பாடத்திட்டத்தினை உருவாக்கி, கணினி பயிற்றுநர்களைக் கொண்டு கணினி பாடத்தை மாணவ, மாணவியருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் பணியிடை பயிற்சிகள் மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மேற்படி நிதியில் இருந்து மாணவ, மாணவியருக்கு கணினி அறிவியல் பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய தி.மு.க. அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கணினி அறிவியல் பட்டம் படித்த கல்வியியல் பட்டதாரிகளை பணியிடங்களில் அமர்த்தி மாணவ, மாணவியருக்கு கணினிப் பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலையில், அதனைச் செய்யாமல், இந்தப் பணிகளில் தன்னார்வலர்களை நியமித்து உள்ளது.

மாநிலத்தின் செலவைக் குறைக்க தி.மு.க. அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

மாநிலத்தின் செலவைவிட மிக முக்கியமானதாக விளங்குவது முறையான கல்வித் தகுதி பெற்ற கணினி ஆசிரியர்களை நியமிப்பதும், மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதும் தான் என்பதை தி.மு.க. அரசு புரிந்து கொண்டு தகுதியான ஆசிரியர்களை நியமித்து கணினி அறிவியலை போதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News