தற்கொலைக்கு முன் உண்மையை வெளியிட்டு மனைவியை சிக்கவைத்த கட்டிட தொழிலாளி
- பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார்.
திருமண வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகவும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பலரது வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், பலரது வாழ்க்கையை சோகமானதாகவும் மாற்றுகிறது. திருமண வாழ்வு இனிதாக இல்லாமல் போவதற்கு கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் இல்லாததே பிரதான காரணமாக கூறப்படுகிறது.
அதேபோல் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தவறான தொடர்பும் பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. கணவனோ மனைவியோ, தனது இணை மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் பட்சத்தில், அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அவர் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருந்தால், அதனை உண்மையாக நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அது அந்த நபருக்கு கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தை தரும் பட்சத்தில் அவர் ஒரு கொலையாளியாகவோ அல்லது தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் பரிதாபமான நபராகவோ மாறிவிடுகிறார். இதில் இரண்டாவதாக கூறியதைப் போன்று ஒரு நபர், தனது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து தாங்க முடியாத துக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்ட சோகம் குமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின்(வயது47). இவருக்கும், சுனிதா (45) என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.
பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் சவுதி அரேபியாவில் இருந்த நிலையில், அவருடைய மனைவி சுனிதா கொன்னக் குழிவிளையில் உள்ள கணவரின் வீட்டில் இருந்து வந்தார்.
மனைவி சுனிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பெஞ்சமின் அவருக்கு பிடித்த எல்லாம் செய்து கொடுத்துள்ளார். மனைவியின் விருப்பப்படி தனது பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டினார். பெஞ்சமின் வெளிநாட்டுக்கு சென்று விடும் நிலையில், அந்த வீட்டில் சுனிதா மட்டும் குடியிருந்தார்.
இந்தநிலையில் சமீப காலமாக சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றும் ஏற்பட்டது. அதனை கண்டுபிடித்த பெஞ்சமின், அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதுகுறித்து தகவல் இருந்த பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். தனது மனைவியை பல இடங்களில் தேடினார். ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான சுனிதாவை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி சுனிதா எங்கு சென்றார்? என்று பெஞ்சமின் விசாரித்தார். அப்போதுதான் தனது மனைவிக்கும், திருவந்திக்கரை பகுதியைச் சேர்ந்த சைஜு என்பவருக்கும் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டார்.
மேலும் தான் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் ஆசையாக கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி சென்றுவிட்டதை அறிந்தார். மிகவும் பாசம் வைத்திருந்த தனது மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மிகவும் பாதித்தது.
இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதே நேரத்தில் மனைவி தனக்கு செய்த துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் பெஞ்சமின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது செல்போனில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார். தனது மனைவியின் இந்த செயலை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், ஆகவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதில் பேசினார்.
மேலும் தனது தற்கொலைக்கு தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, தனது மனைவி சுனிதா, அவரது சகோதரி ஷீலா ஆகியோரே காரணம் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஆவேசமாக அதில் தெரிவித்தார். அந்த வீடியோவை வெளியிட்ட சிறிய நேரத்தில் தனது வீட்டில் வைத்து பெஞ்சமின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெஞ்சமின் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் வகையில் பரிதாபமாக இருந்தது. அவரது பேச்சில் அவர் தனது மனைவி மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம் தெளிவாக தெரிந்தது. அதனை தாங்க முடியாமல் அவர் தளுதளுத்த குரலில் நடுங்கியபடியும், கதறிய படியும் பேசியது அனைவரையும் பரிதாபப்பட செய்து விட்டது.
அதே நேரத்தில் பெஞ்சமின் தான் வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக கேட்டுக்கொண்டார். இதனால் பெஞ்சமின் தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பெஞ்சமின் தற்கொலை செய்வதற்கு முன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். பெஞ்சமின் மனைவி சுனிதா, மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி ஷீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பெஞ்சமின் மனைவி சுனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னதாகவே சைஜூவுடன் பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் சைஜுவுடனான தொடர்பை சுனிதா விடவில்லை. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நேரத்தில் கணவர் பெஞ்சமினுக்கு சந்தேகம் எதுவும் வராதபடி நடந்து கொண்டுள்ளார். அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு சைஜுவுடன் சேர்ந்து சுற்றி திரிந்தபடி இருந்திருக்கிறார்.
தனது மனைவியின் விவகாரம் அரசல்புரசலாக பெஞ்சமினுக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் சுனிதா தனது போக்கை விடவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் சுனிதா நிரந்தரமாக குடும்பம் நடத்த சென்று விட்டார்.
இதனை அறிந்த பெஞ்சமின் உடனடியாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். தனது 19 ஆண்டுகால உழைப்பில் கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்துடன் மனைவி மாயமானது அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று சுனிதா கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடினர். இந்த நிலையில் பெஞ்சமினின் மனைவி சுனிதா போலீசாரிடம் சிக்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுனிதாவின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி சீலா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெஞ்சமின் எதுவும் கூறாமல் தற்கொலை செய்து இருந்தால் அவரது சாவு சாதாரண தற்கொலை வழக்காக இருந்திருக்கும். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அதற்கு காரணமான தனது மனைவி உள்ளிட்டோரை பற்றி மிகவும் தெளிவாக பேசி வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.
இதன் காரணமாகவே பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு முக்கியமான காரணமாக இருந்த அவருடைய மனைவி சுனிதாவும் சிக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.