தமிழ்நாடு

தாய்மொழியை காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2025-02-28 10:53 IST   |   Update On 2025-02-28 10:53:00 IST
  • தமிழ் மொழியை வளர்க்கிற தி.மு.க. அரசின் லட்சணம்.
  • தமிழில் மட்டுமே பேருந்து குறிப்பேடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக சப்பைக்கட்டு கட்டியுள்ளது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம் நாட்டின் தாய்மொழியாம் தமிழ்மொழி வளர்க்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசின் ஆணைகள், கோப்புகள், தகவல் தொடர்புகள் ஆகியவை தமிழில் இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது.

இதனை நிரூபிக்கும் விதமாக, நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அரசுப் பேருந்துகளில் விநியோகிக்கப்படும் பேருந்து குறிப்பேடு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதுநாள் வரை தமிழில் வழங்கப்பட்டிருந்த பேருந்து குறிப்பேடு தற்போது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், இனிமேல் 100 சதவீதம் தமிழில் மட்டுமே பேருந்து குறிப்பேடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக சப்பைக்கட்டு கட்டியுள்ளது. இதுதான் தமிழ் மொழியை வளர்க்கிற தி.மு.க. அரசின் லட்சணம்.

தமிழ் மொழியை காக்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதலமைச்சர் தமிழ்மொழி காக்கும் முழக்கத்தை முன்னிறுத்துவோம் என்று கூறுவது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில், பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்தவும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்க்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News