26 ஆண்டுகளுக்கு பிறகு கட்சிக்கு அங்கீகாரம்: திருமாவளவனுக்கு பாராட்டு விழா
- தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம்.
- கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி பானை சின்னத்தையும் சமீபத்தில் ஒதுக்கியது. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் கட்சி தலைமை அலுவலகத்தில் 24-ந் தேதி மாலை 4 மணிக்கு இந்த விழா நடை பெறுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகள் வரை தேர்தலை புறக்கணித்து மக்கள் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தது.
1999-ம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இறங்கியது. தமிழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி ஒரு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையாக பணியாற்றி வருகிறது.
1990-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி கட்சியின் தலைவர் பொறுப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டார். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது விடுதலை சிறுத்தை கட்சி வெளி மாநிலங்களிலும் பரவி வருகிறது.
மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம். கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.
தென் இந்தியாவில் தலித் தலைமையிலான ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும். திருமாவளவனின் தலைமையை ஏற்று அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பும் பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.