தமிழ்நாடு

FIR-ஐ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை

Published On 2024-12-26 07:26 GMT   |   Update On 2024-12-26 09:03 GMT
  • சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகார் அடிப்படையில் பதிவு செய்த F.I.R. ( முதல் தகவல் அறிக்கை) இன்று காலை வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடு என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான F.I.R. (முதல் தகவல் அறிக்கை) விவரங்களை காவல்துறை முடக்கி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான F.I.R.- ஐ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒளிபரப்பப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News