ராமேசுவரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை எச்சரிக்கை
- தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.
- பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மண்டபம்:
தென் தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை தாக்கி சிறைபிடிப்பதும், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சில நேரங்களில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடும் நடத்தி வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள இலங்கை கடற்பரப்பில் வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று (8-ந்தேதி) பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி இன்று மாலை வரை நீடிக்கும் என தெரிகிறது.
இதற்கிடையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள இலங்கை பகுதிக்கு சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை கடற்படையினர் அவரது எல்லைப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதை கருத்தில் கொண்டு ராமேசுவரம் மீனவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மேலும் பாதுகாப்பாக நமது எல்லைக்குள் மீன் பிடிக்குமாறு ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.