தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டத்தின் நிதியை குறைப்பதா? செல்வப்பெருந்தகை கண்டனம்

Published On 2025-02-04 02:46 IST   |   Update On 2025-02-04 02:46:00 IST
  • கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் பா.ஜ.க. அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. 2021-22-ல் ரூபாய் 98,468 கோடி ஒதுக்கிய நிலையில், 2024-25-ல் ரூபாய் 86,000 கோடி நிதி ஒதுக்கியது. இது மொத்த பட்ஜெட் தொகையில் 1.78 சதவிகிதமாகும்.

100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால் பட்ஜெட்டில் மொத்தம் ஒதுக்கப்படுகிற தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.18 சதவிகிதம் தான்.

மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் வாழ்கிற கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதியை குறைத்து தேவையற்ற நிபந்தனைகளை விதித்து அத்திட்டத்தை முடக்குகிற பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News