தமிழ்நாடு
மத்திய அரசின் வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்.. நாளை முன்மொழிகிறார் முதல்வர்

மத்திய அரசின் வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்.. நாளை முன்மொழிகிறார் முதல்வர்

Published On 2025-03-26 21:49 IST   |   Update On 2025-03-26 21:49:00 IST
  • மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிகிறார்.
  • வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை ஒன்றிய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழக அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.



மசோதாவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த பல்வேறு நிறுத்தங்களில் 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்பின் 655 பக்க அறிக்கை தயாரானது.

இதற்கு கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.

கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பாஜக எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சிறுபான்மையினரின் மத உரிமைகளை பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். 

Tags:    

Similar News