பிரியங்கா காந்தி தான் இன்ஸ்பிரேஷன்! - ஈ.வெ.ரா. குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வரும் வீராங்கனை!
- ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் இருந்து அவரது மகன் சஞ்சயை போட்டியிட வைக்க திட்டமிட்டார்கள்.
- ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி மேலிடத்துக்கும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மூத்த அரசியல்வாதியான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1948-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஈ.வி.கே.சம்பத்தின் மகனும், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரனும் ஆவார். இவருக்கு மனைவியும், சஞ்சய் மற்றும் திருமகன் என இரண்டு மகன்கள்.
அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பின்னர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஆட்சியில் மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தார். இதனை தொடர்ந்து 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு 49,336 வாக்குகள் வித்தியாசத்தில் ம.தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இளங்கோவனின் மகனும் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளருமான திருமகன் ஈ.வெ.ரா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் த.மா.கா. இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். அந்த தேர்தலில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டப்பேரவைக்கு சென்றார். இருப்பினும் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமகன் காலமானார்.
இதையடுத்து நடைபெற்ற இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கட்சி பணியிலும், தொகுதி பணியிலும் ஈடுபட்டு வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14-ந்தேதி காலமானார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க போகின்றனர்.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு கொடுப்பதை விட தி.மு.க.வே போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் பேரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அப்போது தலைவர் என்ற ரீதியில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்கள்.
ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லை. ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் இருந்து அவரது மகன் சஞ்சயை போட்டியிட வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி விட்டார். அத்துடன் தனது முடிவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தெரிவித்து விட்டார்.
இந்த சூழ்நிலையில் காங்கிரசில் இருந்து வேறு நபர்களை தேர்வு செய்வதிலும் பிரச்சனை உள்ளது. இடைத்தேர்தலை சந்திக்க செலவு அதிகமாகும். அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி மேலிடத்துக்கும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் தாத்தா, அப்பா மாதிரி தானும் அரசியலுக்கு வருவேன் என ஈ.வி.கே.எஸ் பேத்தி சமணா ஈவெரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும், திருமகனின் மகளுமான சமணா ஈ.வெ.ரா. கூறியதாவது:-
என் அப்பா இறந்து ஒரு வருடம்தான் ஆகுது. அந்த வலியும் வேதனையும் ஆறுவதற்குள்ளேயே தாத்தா எங்களைவிட்டுப் போனது பேரிழப்பு. அப்பாவோட மரணத்தால் அவர் ரொம்பவே பாதிக்கப்பட்டார். அந்த வலியை எங்கக்கிட்ட காட்டிக்கொள்ளாமல் தைரியம், நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்.
தாத்தாக்கிட்ட ரொம்ப பிடித்த விஷயமே அவரோட தைரியம்தான். தாத்தாவைப் பார்க்க வீட்டுக்கு அரசியல்வாதிகள் வந்தாங்கன்னா, சின்ன வயசுல நான் பயப்படுவேன். அந்த பயத்தைப் போக்கணும்ங்குறதுக்காக என்னை மடியில உட்கார வச்சுப் பேசுவார். அதனாலேயே, எனக்கும் அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு வந்துடுச்சு. அப்பாவோட மறைவுக்குப் பிறகு தாத்தா என்னிடம் அதிகமாகப் பேச ஆரம்பித்தார். அவர்க்கிட்ட அரசியலுக்கு வரப்போகிற என்னோட ஆர்வத்தை வெளிப்படுத்தினபோது மிகவும் ஆச்சர்யப்பட்டார்.
என்னிடமிருந்து அப்படிப்பட்ட ஆர்வத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை. விளையாட்டுல சாதிச்சமாதிரி, அரசியலிலும் சாதிப்பேன்-னு சொன்னார். அரசியலிலும் துணிவு ரொம்ப முக்கியம். அதேமாதிரி, மக்களை அணுகுவதில் கனிவு, பணிவு ரொம்ப முக்கியம்-னு சொன்னார். அரசியலில் எனக்கு பிரியங்கா காந்தி மேடம் தான் இன்ஸ்பிரேஷன். ஒரு பெண்ணா ரொம்ப துணிவா இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். மக்களுக்கான அவங்களோட ஓயாத களப்பணியும், தெளிவான பேச்சுகளும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றார்.
குதிரையேற்று வீராங்கனையான சமணா ஈ.வெ.ரா. சமீபத்தில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். இவருடைய தாய் காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமி ஆவார். இவர் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.