தமிழ்நாடு

பாலியல் புகார்: 255 ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: விரைவில் டிஸ்மிஸ் ஆவார்கள்

Published On 2025-02-12 10:18 IST   |   Update On 2025-02-12 10:18:00 IST
  • மாணவர்களிடம் தவறாக ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு.

சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஒருசில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதில் பாதிக்கப்படும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளில் ஒருசிலர்தான் புகார் தெரிவிக்கின்றனர். பாலியல் தொல்லை தொடர்பான புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் போலீசில் புகார் செய்யப்படுகிறது. அதன்பிறகு போலீசார் கைது செய்கின்றனர்.

இதனால் எந்தெந்த பள்ளிகளில் பாலியல் புகார்கள் உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யார் யார்? என்ற பட்டியலை மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பள்ளி மாணவிகளுக்கு, கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்குகள் சரியானதல்ல.

இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு துறைரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை (121) 2012-ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. அதில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டாய ஒய்வு அல்லது பணிநீக்கம் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படும்.

ஆசிரியர்களை பொருத்த வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். அதேபோல், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் கல்விச் சான்றி தழ்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்று பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த அரசாணை முழுமையான செயல்பாட்டுக்கு வர வில்லை.

தற்போது அதை மீண்டும் அமலுக்கு கொண்டு வரு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஆசிரியர்கள் மீதான புகார், அதன் உண்மைத்தன்மை, துறைரீதி யான நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை, விசாரணைக்குழு அறிக்கை, வழங்கப்பட்ட தண்டனை, நிலுவையில் உள்ளவை, பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், தவறு நிரூபணமானவர்கள், பொய் புகார்கள் உட்பட அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக்கல்வித் துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறிழைத்த ஆசிரி யர்கள் மீது அரசாணை 121-ன் படி துறைரீதியாக பணிநீக்கம் போன்ற நட வடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ் களும் ரத்து செய்யப்படும்.

விரைவில் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மார்ச் மாதமே இது அமலுக்கு கொண்டுவரப் படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News