அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை- மக்கள் நலனில் கவனம் செலுத்த தயங்குவது ஏன் ?- டிடிவி தினகரன்
- நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அரசு மருத்துவமனைகளில்நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிப்பு – மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ?
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அங்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில், அம்மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை கூட நியமிக்காமல் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை மருத்துவர்கள் பற்றாக்குறை எனக்கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சையின்றி பல நோயாளிகளின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.