தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது- அமைச்சர் சக்கரபாணி

Published On 2025-02-05 17:47 IST   |   Update On 2025-02-05 17:47:00 IST
  • தமிழ்நாடு ஊக்கத்தொகையை உயர்த்தியதன் காரணமாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450/- என்ற விலை.
  • பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2002-2003 கொள்முதல் பருவத்திலிருந்து அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் விவசாயிகள் கோரிக்கை எதும் வைக்காமலேயே அரசு வழங்கும் தமிழ்நாடு ஊக்கத்தொகையை உயர்த்தியதன் காரணமாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2405/- என்ற விலையிலும் 1.9.2024 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

01.09.2024 முதல் 04.02.2025 வரை, தமிழ்நாடு முழுவதும் 2444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுச் செயல்படுத்தி, 1,44,248 விவசாயிகளிடமிருந்து 10.41,583 மெட்ரிக் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2.247.52 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 4.2.2024 வரை 7,42,335 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் 4.2.2025 வரை 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,99,248 மெட்ரிக் டன் அதிகமாகும்.

நெல் விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News