தமிழ்நாடு

யுஜிசி விதிகளுக்கு எதிராக போராட்டம்- டெல்லியில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு

Published On 2025-02-05 19:17 IST   |   Update On 2025-02-05 19:17:00 IST
  • தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
  • டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.

யுஜிசி விதிகளுக்கு எதிராக டெல்லியில் நாளை திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழிலரசன் செய்தியாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து மாநில உரிமைகளை பறிப்பதிலும், குறிப்பாக காவிமயமாக்குவதற்காக கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்கள் கட்டுப்பாட்டை கொண்டு செல்கிற முயற்சிகளில், தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கொண்டு வந்தார்கள்.

அந்த அறிக்கையில் வழங்கப்பட்டதை போல இனி யுஜிசி என்று ஒன்று இருக்காது. இன்று யுஜிசி மூலம் கல்வியை மொத்தமாக அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்கலைக்கழக நிதி நெல்கைக் குழு என்பதனை இன்றைக்கு பல்கலைக்கழகங்களை விழுகுகின்ற குழுவாக மாறுகின்ற வகையில் மாநில உரிமைகளை பறிப்பதற்கும், கல்வி உரிமையை பறிப்பதற்கும், சமூக நீதிக்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும், பல வரைவு நெறிவு முறைகளை வெளியிட்டிருக்கிறது.

அதை எப்போதும் போல பிற மாநிலங்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அதனை விரைவாக எதிர்க்கக்கூடிய மாநிலமாக சமூக நீதியின் மண்ணாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் கண்டித்தும் அதை நிறைவேற்றக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை அவரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதைதொடர்ந்து திமுக மாணவர் அணியும், பிற மாநில அமைப்புகளின் மாணவர் அணியும் கூட்டமைப்பை கொண்டு ஒரு மாபெரும் போராட்டம் சென்னையின் நடந்தது.

ஒரு மாதம் ஆன நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிஎம்சி சார்பாக சுதீப், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News