வானில் நிகழும் அதிசயம்: ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்
- சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாக அமைகிறது.
- அடுத்த மாத நிகழ்வில் சந்திரனும் ஒரே வரிசையில் தென்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்பட அனைத்து கிரகங்களும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களை நாம் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாக அமைகிறது.
பொதுவாக 3 அல்லது 4 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அபூர்வ நிகழ்வானது தற்போது அரங்கேறி வருகிறது. அதாவது, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்பட்டு வருகின்றன.
இவற்றை காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் நாளை முதல் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) வரை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதில் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை வெறும் கண்களாலும், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களை மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளாலும் காண முடியும்.
இந்நிகழ்வை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் வருகிற 25-ம் தேதி வரை தினமும் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை தொலைநோக்கி மூலமாக பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
இது கண்ணுக்கு விருந்தாக அமையும் என்பது வானியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 28, ஆகஸ்டு 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும். அடுத்த மாத நிகழ்வில் சந்திரனும் ஒரே வரிசையில் தென்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.