அமோக நெல் விளைச்சல் எதிரொலி- அரிசி விலை குறைகிறது
- தமிழ்நாட்டில் குறுவை அறுவடை முடிந்த நிலையில் அதில் எதிர்பார்த்த அளவுக்கு நெல் விளைச்சல் இருந்தது.
- இந்தியாவில் வழக்கமாக 130 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும்.
சென்னை:
தமிழ்நாட்டில் நெல் அறுவடை சம்பா, குறுவை பெயரில் அறுவடை நடக்கிறது. இதில் சம்பா அறுவடையில் 75 சதவீதமும், குறுவை அறுவடையில் 25 சதவீதமும் இருக்கிறது.
இந்தியா முழுவதும் கடந்த 2023-ம் ஆண்டு பருவமழை கைவிட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்தது. அதாவது, வழக்கத்தைவிட 3.7 சதவீதம் உற்பத்தி குறைந்து காணப்பட்டது. மேலும் சன்னரக அரிசிக்கான ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அரிசி விலை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 'கிடுகிடு'வென உயர்ந்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டில் (2024) தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட நல்ல மழை கொடுத்து சென்றதால், நெல் விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் குறுவை அறுவடை முடிந்த நிலையில் அதில் எதிர்பார்த்த அளவுக்கு நெல் விளைச்சல் இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது சம்பா அறுவடையும் தொடங்கியுள்ளது. கனமழையால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் அறுவடை பாதிப்பு இருந்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் சம்பா விளைச்சல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 72 லட்சம் டன் நெல் விளைச்சல் இருக்கும் இடத்தில் 70 லட்சம் டன்தான் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த நிலை இருந்தாலும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களிலும் நெல் விளைச்சல் அமோகமாக இருந்து இருக்கிறது.
இதனை பம்பர் அறுவடை என்று சொல்கிறார்கள். அதாவது, இந்தியாவில் வழக்கமாக 130 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும். பருவமழை கைக்கொடுத்ததன் விளைவாக 137.83 மில்லியன் டன் நெல் உற்பத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இது 140 மில்லியன் டன் உற்பத்தி வரை செல்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளைச்சலை முன்கூட்டியே உணர்ந்தே அரிசிக்கான தடையை நீக்கியும், அதற்கான சுங்க வரியை விலக்கியும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததாக சொல்லப்படுகிறது.
நெல் அமோக விளைச்சல் காரணமாக 60 கிலோ நெல் மூட்டை ரூ.1,400 முதல் ரூ.1,500 வரை தற்போது இருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டில் இதன் விலை ரூ.1,700 முதல் ரூ.1,800 ஆக இருந்தது. நெல் விலை தற்போது குறைந்துள்ளதால், அரிசி விலையும் அடுத்த மாதத்தில் (பிப்ரவரி) இருந்து குறைய வாய்ப்பு இருப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் பொதுச் செயலாளர் ஏ.சி.மோகன் கூறும்போது, 'பருவமழை எதிர்பார்த்ததை விட கைக்கொடுத்து இருப்பதால் நெல் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. இதனால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அடுத்த மாதத்தில் (பிப்ரவரி) இருந்து குறைய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. விலை குறைவால் விவசாயிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. விளைச்சல் அதிகமாக இருப்பதால் வருகிற ஆகஸ்டு மாதம் வரை அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது' என்றார்.