தமிழ்நாடு

சீமான் இல்லம் நோக்கி செல்வதற்கு நா.த.க.வினருக்கு போலீசார் அனுமதி மறுப்பு

Published On 2025-01-22 09:19 IST   |   Update On 2025-01-22 09:19:00 IST
  • சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
  • நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.

இது தொடர்பாக காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 22-ந்தேதி சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.

பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்ற அறிவிப்பை அடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவு முதலே குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கையாக சீமான் இல்லம் நோக்கி செல்வதற்கு நா.த.க.வினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

பலர் சீமான் இல்லம் முன்பு குவிந்துள்ள நிலையில் புதிதாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சீமான் இல்லம் செல்லும் பாதையிலேயே கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சீமான் வீட்டிற்கு 200 மீட்டர் தொலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம் நடத்த வரும் பெரியாரிய அமைப்பினரை கைது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News