அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு- தனிப்படை விசாரணை
- மாணவியின் செல்போன் எண்ணில் இருந்து அவரது தந்தையின் செல்போன் எண்ணையும் மிரட்டி வாங்கி தனது செல்போனில் பதிவு செய்துள்ளான்.
- கைதான ஞானசேகரன் போனில் குறிப்பிட்ட நபரை சார் என்று அழைத்ததால் அவர் ஏதாவது முக்கிய பொறுப்பில் இருக்கும் நபராகவே இருப்பார் என்று போலீசார் கருதுகிறார்கள்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் என்ஜீனியரிங் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனான மாணவருடன் மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் இருவரும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதுடன், காதலனை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வாலிபர் ஞானசேகரனால் மாணவி கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) யில் அதிர வைக்கும் வகையில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி தனது காதலனுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்.எச்.கட்டிடத்தின் பின்புறம் உள்ள தூண் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஞானசேகரன் இருவரையும் மறைந்து இருந்து சிறிது நேரம் ரசித்துள்ளான். அப்போது மாணவிக்கு காதலன் முத்தம் கொடுத்துஉள்ளார். இதனை தனது செல்போனில் படம் பிடித்த ஞானசேகரன் அருகில் சென்று இருவரையும் மிரட்டியுள்ளான்.
நீங்கள் இருவரும் முத்தமிட்ட காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளேன். அதனை டீன், பல்கலைக்கழக ஊழியர்கள் ஆகியோரிடம் காட்டினால் இருவரையும் பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். எனவே நான் சொல்கிறபடி கேட்டால் நீங்கள் தப்பிக்க வழி உள்ளது என்று கூறிய ஞானசேகரன் மாணவியின் காதலனிடம் சத்தம் போடாமல் இங்கிருந்து ஓடிவிடு என்று விரட்டி விட்டு உள்ளான்.
பின்னர் மாணவியை மிரட்டி இருள் சூழ்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற வாலிபர் ஞானசேகரன் அவரிடம் ½ மணி நேரத்துக்கும் மேலாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொடுமைப்படுத்தியுள்ளான்.
அப்போது ஞானசேகரன் தற்போது 3 வழிகள் உள்ளன? அதில் நான் எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளான். உனது வீட்டில் இருப்பவர்கள் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு வீடியோவை அனுப்பி உன்னை படிக்க விடாமல் செய்ய முடியும். இதில் இருந்து தப்பிக்க என்னுடன் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும். மேலும் அந்த சாருடன் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளான்.
இதனால் எங்கே மாட்டிக் கொள்வோமோ? என்கிற பயத்தில் மாணவி, ஞானசேகரனிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்துள்ளார். அப்போதுதான் ஞானசேகரன் மாணவியிடம் தனது காம இச்சையை தீர்த்துக் கொண்டுள்ளான்.
பின்னர் இதுபற்றி யாரிடமும் வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டிய ஞானசேகரன் பாலியல் அத்துமீறல் சம்பவத்தை தனது செல்போனிலும் வீடியோ பதிவு செய்துள்ளான். பின்னர் மாணவியின் அடையாள அட்டையை போட்டோ எடுத்ததுடன் மாணவியின் செல்போன் எண்ணில் இருந்து அவரது தந்தையின் செல்போன் எண்ணையும் மிரட்டி வாங்கி தனது செல்போனில் பதிவு செய்துள்ளான்.
தனது வேலை முடிந்த பின்னர் மாணவியிடம் இப்போது போ... 2 நாளில் நான் மீண்டும் கூப்பிடுவேன் அப்போது வரவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளான்.
இவ்வாறு எப்.ஐ.ஆரில் அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் மாணவி பாலியல் விவகாரத்தில் புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. கைதான ஞானசேகரன் மாணவியை மேலும் ஒருவருடன் பாலியலில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளான். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போது ஞானசேகரனிடம் போனில் அந்த நபர் பேசியுள்ளார். அந்த போனில் பேசும்போது நான் அவளை மிரட்டி விட்டு விடுவேன் என்று கூறியதுடன் அந்த சாருடன் நீ ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான். இதன் மூலம் பாலியல் விவகாரத்தில் ஞானசேகரனுக்கு தெரிந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
கைதான ஞானசேகரன் போனில் குறிப்பிட்ட நபரை சார் என்று அழைத்ததால் அவர் ஏதாவது முக்கிய பொறுப்பில் இருக்கும் நபராகவே இருப்பார் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றி ஞானசேகரனிடம் இருந்து போலீசார் அதன் பின்னணி பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் மாணவி பாலியல் வழக்கில் 2-வது நபருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவரை கைது செய்யவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.