கோடை விடுமுறை: விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க தெற்கு ரெயில்வே முடிவு
- சிறப்பு ரெயில்களை இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
- 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
கோடைகாலம் தொடங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறைவிட்ட பின்னர் பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரும்பாலான ரெயில்களில் குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை கூடி வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, தேவை அதிகமுள்ள விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் வழக்கமாக செல்லும் விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்த பிறகு, கோடை விடுமுறை தொடங்கும்போது பொதுமக்கள் சொந்த ஊர்கள், சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் செல்வார்கள்.
எனவே, அடுத்த மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரெயில்களை இயக்கவும், வழக்கமான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களில் படிப்படியாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரெயில்களில் 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்களில் முன்பதிவு, காத்திருப்போர் எண்ணிக்கை பட்டியலை தெற்கு ரெயில்வே தயாரித்து வருகிறது.
இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உட்பட பல்வேறு விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.