தமிழ்நாடு
சொந்த செலவில் 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்

விமானத்தில் புறப்பட மகிழ்ச்சியுடன் சென்ற மாணவ-மாணவிகள்.

சொந்த செலவில் 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்

Published On 2025-03-22 15:00 IST   |   Update On 2025-03-22 15:00:00 IST
  • பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது.
  • பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம் பட்டியில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பள்ளிக்கு தனது சொந்த செலவில் கட்டிடம் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து இருந்த நிலையில், பள்ளியில் போக்குவரத்து பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் தலைக்கு மேலே பறக்கக்கூடிய விமானத்தில் நாம் என்று பறப்போமோ என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் சொந்த ஊர் அருகே ரெயில்வே நிலையம் இருக்கிறது. ஆனால் ரெயிலில் கூட பயணித்ததில்லை எனக் கூறிய மாணவ-மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்தார் தலைமை ஆசிரியர் பொன்ராஜ்.

மாணவர்களிடம் தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறிய தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 3 மாதங்களுக்கு முன்பே தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து அதன்படி இன்று காலை 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்று சென்னையில் வண்டலூர் பூங்கா மற்றும் மெட்ரோ ரெயில் பூண்டவட்டில் அழைத்துச் சென்று பார்வையிட உள்ளனர். நாளை மாலை சென்னையில் இருந்து முத்துநகர் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தர இருக்கின்றனர்.

மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய நிலையில் நாங்கள் விமானத்தில் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் மாணவர்கள் எங்களால் விமானத்தில் பணம் கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலையில் எங்கள் ஆசிரியர் அவரது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்துச் சென்று உயிரியல் பூங்காக்களை பார்வையிட வைப்பது ரெயிலில் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்கள் தங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதாகவும் நல்லாசிரியர் பொன்ராஜ்க்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உருக்கமாக மாணவர்கள் கூறினர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறுகையில், 2014-ம் ஆண்டு முதல் பண்டாரம் பட்டிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பாடம் சம்பந்தமாக மாணவர்களை எனது சொந்த செலவில் அழைத்துச் செல்வது வழக்கம், பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

அது எனது மிகுந்த கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 17 மாணவ-மாணவிகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள், தான் உட்பட 20 பேர் செல்கிறோம். இதற்கு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவு ஆகிறது என்றார். மேலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News