கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் சவுக்கு சங்கர் நிரூபிக்கட்டும்- செல்வப்பெருந்தகை
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடுசூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடி கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சனகர் குற்றசாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "சவுக்கு சனகர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தி அவர் பேசியதை ஏற்கமுடியாது. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். சவுக்கு சங்கருக்கு வேண்டியவரை காங்கிரஸ் தலைவராக்க இதனை அவர் செய்கிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும்" என்று தெரிவித்தார்.