அரசியல் ஆதாயத்திற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை தி.மு.க. கிளப்புகிறது- நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
- தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
- தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயம தேடுவதற்காக தி.மு.க. மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களில் இறங்கி உள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டு பின்பு கையெழுத்து போட மாட்டோம் என்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
தாய் வழிக்கல்வியை தான் அது ஊக்குவிக்கிறது. அமித்ஷா கூட, மருத்துவ, என்ஜினீயரிங் படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தை தி.மு.க. வணிக நோக்கத்தில் அணுகுகிறது. உண்மையில் அவர்களுக்கு தமிழ் மொழி மீது அக்கறை இல்லை.
இவர்கள் மொழி பிரச்சனையை கிளப்புவதற்கு மற்றொரு காரணம், இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. கேரளாவும், காங்கிரசை தோற்கடிக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது.
பி.எம். ஸ்ரீ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அதனை ஏற்று கொண்டு விட்டார்கள். தமிழகம் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. டெல்லி நிர்பயா, மேற்கு வங்காளத்தில் ஒரு மருத்துவ மாணவி கொலை ஆகியவை இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம், இங்கேயே அடக்கப்பட்டு, வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்? உங்கள் கட்சியை சேர்ந்தவர் தானா என்பதனை சொல்ல வேண்டும். போதை பொருளில் முக்கிய நபர் சிக்கி உள்ளார். அதேபோல் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்து உள்ளது. நிச்சயம் நான் சொல்கிறேன், தமிழகத்தில் மத்திய ஏஜென்சிகள் நடத்தும் வழக்குகளில் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.
இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துவிட்டார். ஆனால் இவர்கள் வேண்டும் என்றே, பிரச்சனையை கிளப்புகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கும், வடமாநிலங்கள் பலன் அடைய தானே செய்யும் என்று கேட்கிறீர்கள்.
மக்கள்தொகை மட்டும் அடிப்படை இல்லை என்பதனை தெளிவாக சொல்கிறேன். அப்படி செய்தால் லடாக் போன்று சிறு சிறு பகுதிகளுக்கு எம்..பி.க்கள். இருக்காது. தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பின் ஒரு தன்னதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதன்பின்தான் தொகுதி வரையறையை மேற்கொள்வார்கள். 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது.
ஏற்கனவே ராகுல்காந்தி, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி பிரிக்கப்படும் என்று பிரசாரம் செய்தார். இப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது வெடகக்கேடானது. இங்கு வந்திருக்கும் கேரள முதல்-மந்திரியிடம் முல்லைப்பெரியாறு நீர் குறித்து கேட்கலாம் அல்லவா? கர்நாடக துணை முதல்-மந்திரியிடம் காவிரி நீர் கேட்கலாம் அல்லவா? அதேபோல் எல்லோரிடமும் நீங்கள் கல்விக்கொள்கையை ஏற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம்.
இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக கேட்கிறீர்கள்?. இது வங்கிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். எனவே விரைவில் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.