கோடை காலத்தை சமாளிக்க தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது- அமைச்சர் செந்தில் பாலாஜி
- தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.
- தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார்.
கோவை:
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது. புதிதாக 7000 தெர்மல் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி, 14 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி, 2000 பேட்டரி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது.
எங்காவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்பட்ட மின்தடை உடனே சரி செய்யப்பட்டு இருக்கும்.
பொதுமக்கள் இதுகுறித்து உடனே புகார் கூறினால் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து நடவடிக்கை எடுத்து சரி செய்வார்கள். இதற்காக மின்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிலர் இந்த அரசு குறித்து ஏதையாவது தெரிவித்து, இவர்கள் கீழே விழமாட்டார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய திட்டங்களால் தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கனவே கூறியது போல அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை வெல்ல தமிழக முதலமைச்சர் மாநில முதல்-மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதிலும் வெற்றி பெறுவோம்.
மதுவிலக்கு பொறுத்தவரை ஒரு தலைவர் 2023-ம் ஆண்டில் கூறிய கருத்தையும், இப்போது அவர் கூறிய கருத்தையும் நாம் பார்த்து வருகிறோம். அடிக்கடி பேச்சை மாற்றிக் கொள்ளக் கூடாது.
இன்று நடைபெறும் போராட்டம் குறித்து கேட்கிறீர்கள். கோமாளிகள் செயல்களுக்கு நான் பதில் கூற முடியாது. அரசு நிகழ்ச்சி இதில் அரசியல் பேச வேண்டாம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.108 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.67 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 39 ஆயிரத்து 494 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பவன் குமார், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.