தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தி.மு.க.வுக்கு பாதகமான நிலை உண்டாகும்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-03-22 13:48 IST   |   Update On 2025-03-22 13:48:00 IST
  • அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.
  • தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

நெல்லை:

தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு கூட்டத்திற்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற குழு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் சேர்ந்து கருப்பு கொடி ஏந்தியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பை தெரிவித்தார்.

அப்போது நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், நிர்வாகி கார்த்திகேயன் உள்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. பலவீனமாக உள்ளதால் தேவையில்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்தனர். மத்திய அரசு அதனை நேரடியாக கையில் எடுத்து நல்ல முடிவை தந்தது. நமக்கு தண்ணீர் தராத கேரள முதல்-மந்திரி, கர்நாடக துணை முதல்-மந்திரி ஆகியோரை அழைத்து தி.மு.க. அரசு கூட்டம் நடத்துகிறது. மொழி கொள்கை பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

ஏதாவது ஒரு மொழி படிக்கலாம் என்பதை தான் மத்திய அரசு மொழி கொள்கையில் சொல்கிறது. மும்மொழி கொள்கைக்கு 95 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். பா.ஜ.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தானாக முன்வந்து கையெழுத்துபோட்டு வருகின்றனர்.

இந்தி இல்லாவிட்டாலும் தென்னிந்திய மொழி கூட கற்கலாம். தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புடனேயே நிற்கிறது. அதனால் தான் மத்திய அரசை ஏதாவது ஒரு கதையை வைத்து குறை கூறுகின்றனர்.

மக்களை திசை திருப்பவே தி.மு.க. இது போன்ற செயலில் ஈடுபடுகிறது.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு படிப்படியாக கடையை உயர்த்தும் நிலையில் உள்ளது. அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.

மின்கட்டணம், தொழில்வரி, சொத்துவரி உயர்வால் தொழில் முனைவோர் திணறும் நிலைக்கு ஆளாகின்றனர்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.விற்கு பாதகமான நிலை உண்டாகும். தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News