2026 தேர்தல் : ம.நீ.ம. நிர்வாகிகள் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தயாராக வேண்டும்-கமல்
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
- சட்டசபை தேர்தல் குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனை.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் தயாராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்-சபை எம்.பி.யாக இருக்கும் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் இரட்டைவெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார்.
இதற்காக சட்டசபை தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கும் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியை சட்டமன்ற தேர்தலுக்குள் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
தேர்தலை எதிர்கொள் ளும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் கட்சிப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல், சினிமா என இரண்டிலும் கால் பதித்து வரும் கமல்ஹாசன் சட்ட சபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவும் முடிவு செய்தி ருக்கிறார்.
இதற்கான ஆயத்த பணி களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். அதன்பிறகு பாராளுமன்ற, சட்ட சபை தேர்தலை சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க சதவீத அளவுக்கு வாக்குகளை பெற்றாலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நீதி மையம் கட்சியின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்துவிட வேண்டும் என்பதிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்தி உள்ளார்.
இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.