ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு- நோயாளிகளிடம் செல்போனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
- ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.
கோவை:
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை கோவை மாவட்டம் புகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்த டாக்டர்களுடன் இணைந்து திடீர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அவசரகால இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருந்த நோயாளிகளின் பெயர் விவரங்களை குறித்துக்கொண்டார்.
பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட நோயளாளிகளை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். மேலும் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த நோயாளிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களின் சிகிச்சை முறை எப்படி இருந்தது, உங்களின் உடல்நிலை தற்போது எந்த வகையில் மேம்பட்டு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
அதன்பிறகு அந்த நோயாளிகளிடம் தொடர்ந்து மேல்சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா என்ற தகவலையும் உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போது அவர்கள், தாங்கள் பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாக அமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு இருந்த மேலும் பல்வேறு பதிவேடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.
சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தியபோது அவருடன் மாவட்ட சுகாதார நல அலுவலர் டாக்டர் பாலுசாமி, புகலூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், உதவி மருத்துவர் டாக்டர் இலக்கியா மற்றும் நர்சுகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் சுப்பிரமணியன் ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கோவை வழியாக சென்றார். அப்போது அவர் அதிரடியாக புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.