விவேக் எக்ஸ்பிரசில் ரெயில்வே ஊழியர்கள் மோதல்: 4 பேர் கைது
- முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.
தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.