பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புரோக்கராக செயல்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி கைது
- மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
- அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.
ஒட்டன்சத்திரம்:
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற ஒருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே புதுப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான நல்லமுத்து என்ற கண்ணன் (வயது 40) மூலம் அந்த நோட்டுகளை பெற்று புதுச்சேரியில் மாற்றியதாக தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நல்லமுத்து தரகராக செயல்பட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதுச்சேரியில் மாற்றி கொடுத்துள்ளார். இவருக்கு சேலம் மாவட்டம் சுந்தரம்வரதன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் புதுச்சேரியில் புதிய நோட்டுக்கு பழைய நோட்டு தருவதாக மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த ராமானுஜம் (48), பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற 20 சதவீதம் கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம்
கன்னிவாடி அடுத்து புதுப்பட்டிக்கு வந்த புதுச்சேரி போலீசார் ரெட்டியார்சத்திரம் போலீசார் உதவியுடன் நல்லமுத்து என்ற கண்ணன் குறித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதை அடுத்து அங்கு விரைந்து சென்று புதுச்சேரி போலீசார் நல்ல முத்து என்ற கண்ணனை கைது செய்து விசாரணைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்லமுத்து என்ற கண்ணன் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.