ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
- சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
- மாணவனை போலீசார் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 18-ந் தேதி அதிகாலையில் ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது 3 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர் ஷா ஆகியோரை தேடி வந்தனர். இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுடைய உறவினரான 16 வயது சிறுவன், இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பிளஸ்-1 படித்து வரும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்து விட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜாகீர் உசேன் கொலை வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாகீர் உசேனை கொலை செய்ய அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது உதவியதாக கிடைத்த தகவலின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.