தமிழ்நாடு
அ.தி.மு.க.-வுடன் கூட்டணி: எல்லோரும் உட்கார்ந்து அடுத்த ஆட்சியை அமைக்கப்போகிறோம் - தமிழிசை சவுந்தரராஜன்

அ.தி.மு.க.-வுடன் கூட்டணி: எல்லோரும் உட்கார்ந்து அடுத்த ஆட்சியை அமைக்கப்போகிறோம் - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2025-03-26 09:36 IST   |   Update On 2025-03-26 09:36:00 IST
  • டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை ஒரு தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
  • பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

பா.ஜ.க. சார்பில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ரவி பச்சமுத்து, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், டிடிவி தினகரன், ஓபிஎஸ், ரவிந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்தார் விருந்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம், டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை ஒரு தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இங்கு இப்தார் நடந்தது ஒரு தொடக்கம். இதேமாதிரி எல்லோரும் உட்கார்ந்து அடுத்த ஆட்சியை அமைக்கப்போகிறோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் பற்றி புகார் தெரிவிக்க அ.தி.மு.க. தரப்பில் அமித்ஷாவிடம் நேரம் கேட்கப்பட்டது. அதன்பேரில் இந்த சந்திப்பு நடந்தது.

பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக 2 கட்சிகளும் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Tags:    

Similar News