பாம்பன் புதிய ரெயில் பாலம் 2 வாரத்தில் திறப்பு
- புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
- பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று வந்தனர்.
இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து காரில் வந்து பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் பழைய பாலத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சென்று, புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நிருபர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னர்தான் ராமேசுவரம் ரெயில் நிலைய பணிகள் முடிவடையும்" என்றார்.