தமிழ்நாடு
கைரேகையை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடையாது- அரசின் மானியம் புதுப்பிக்க செலவாவதாக பொதுமக்கள் ஆதங்கம்

கைரேகையை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடையாது- அரசின் மானியம் புதுப்பிக்க செலவாவதாக பொதுமக்கள் ஆதங்கம்

Published On 2025-03-26 13:39 IST   |   Update On 2025-03-26 13:39:00 IST
  • பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது.
  • ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்பவர்கள் பயோமெட்ரிக் முறைப்படி தங்கள் கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ரேசன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் ரேகை வைக்க வேண்டும்.

ஏற்கனவே கைரேகைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களின் ரேகை அதனுடன் ஒத்திருந்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலர் புதுப்பிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ரேசன் கடை ஊழியர்கள் கைரேகை பொருந்தாதவர்களிடம் நீங்கள் இன்னும் ஆதார் கார்டில் உங்கள் கைரேகையை அப்டேட் செய்யவில்லை. எனவே பொருட்கள் வாங்க முடியாது என்கிறார்கள்.

ஆனால் விபரம் புரியாத சாதாரண மக்கள் 'சார். என்னிடம் ஆதார்கார்டும் இருக்கிறது. அதில் என் கைரேகை தான் இருக்கிறது' என்று சொல்கிறார்கள்.

அதற்கு ரேசன் ஊழியர்களும் நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை கேட்டதும் எதுவும் புரியாமல் சினிமாவில் வடிவேலு 'அப்ரண்டி ஷிப்' என்பதை 'அப்ரசண்டிகள்' என்பதை போல் ஏதோ அப்ரடிக்காம்... ஒண்ணும் புரியலை என்றபடி பரிதாபமாக திரும்பி செல்கிறார்கள்.

விருகம்பாக்கம் மின் மயானம் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருள் வாங்க சென்றவர் அவரது ரேகை ஒத்துப்போகவில்லை என்றதும் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து சென்றுள்ளார். அவரது ரேகையும் ஒத்துப்போகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றார்கள். தினசரி வேலைக்கு செல்லும் அவர்கள் கூறியதாவது:-

ஆதார் கார்டில் கைரேகையை அப்டேட் செய்ய கோயம்பேட்டில் இருக்கும் ஆதார் தலைமை அலுவலகம் அல்லது போஸ்ட் ஆபீஸ்களுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.

கோயம்பேட்டுக்கு சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருந்தாலும் முடியாமல் செல்பவர்களும் உண்டு. வேலைக்கு லீவு போட முடியாது என்பதால் தனியார் நெட்சென்டர்களுக்கு சென்று முன்கூட்டி நேரம் முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கு ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அனைவரது ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய ரூ.1000 செலவாகும்.

எங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி தான் நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மாதத்திற்குரிய பொருட்கள் எதையும் வாங்க முடியவில்லை.

பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது. இதற்காக அரசு தரும் மானிய தொகையை ஆதார் கார்டு அப்டேட் செய்ய செலவழிக்க வேண்டி இருப்பதாக அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

Tags:    

Similar News