சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏப்ரல் முதல் AC ரெயில் சேவை - ஆனால் ஒரு TWIST
- இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
- இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணிக்கும் புறநகர் ரெயில் சேவைகள் உள்ளது. இதைத்தவிர கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும் பறக்கும் ரெயில்கள் செல்கின்றன.
இந்த ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இந்த புறநகர் ரெயில்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக மெட்ரோ ரெயில்கள் போல முழுவதும் குளு, குளு வசதிகள் கொண்ட ஏ.சி. புறநகர் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக தானாக திறந்து மூடும் கதவு வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. ரெயில் தயாரிக்கப்பட்டது.
இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த ரெயில் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதால் இந்த குளு, குளு ஏ.சி ரெயில் எப்போது இயக்கப்படும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்தில் இருந்து இந்த ஏ.சி. ரெயில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தென்னக ரெயில்வே அறிவிக்க இருக்கிறது.
மற்ற புறநகர் மின்சார ரெயில்கள் போல நாள் முழுவதும் இந்த ரெயில் இயக்கப்படாது. காலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஏ.சி. ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இடையில் 5 மணி நேரம் இந்த ரெயிலில் கதவு, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் பராமரிப்பு செய்யப்படும்.
இந்த ரெயிலை பொறுத்தவரை கதவுகள் தானாக திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வசதி, அனைத்து பெட்டிகளிலும் சி.சி.டி.வி. கேமரா வசதிகளும் உள்ளது.
இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை. இதில் பயணம் செய்ய ரூ.30 முதல் ரூ. 50 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. பயணிகள் மத்தியில் குளு, குளு ரெயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயும் ஏ.சி. ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.