குமரி மாவட்டத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி பா.ஜ.க. நிர்வாகிகள் போராட்டம்
- குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
தமிழகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை கூட்டம் நடத்தப்படுவது தேவையற்றது என பா.ஜ.க. குறை கூறி வருகிறது. இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அவரது வீட்டின் முன்பும், மாநில செயலாளர் மீனாதேவ் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள தனது வீட்டின் முன்பும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர் தேவ் மற்றும் பலர் கருப்புக்கொடியுடன் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் முத்துராமன், வெள்ளாடிச்சி விளை வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் ரோசிட்டா திருமால், ரமேஷ் உள்ளிட்ட பலரும் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் ராஜாக்கமங்கலம், அகஸ்தீசுவரம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.