தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்துக்கு உடனடி தடை தேவை- ராமதாஸ்

Published On 2025-03-22 12:13 IST   |   Update On 2025-03-22 12:13:00 IST
  • ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு.
  • இதுவரை 3 கால கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று தொடங்கி 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி புதிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் வரை 29 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அந்த சட்டத்தை கவர்னர் திரும்பி அனுப்பியதைத் தொடர்ந்து அதே சட்டம் 2023-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மீண்டும் இயற்றப்பட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருந்தது.

அந்த சட்டத்திற்கு அதே ஆண்டின் ஏப்ரல் 10-ந் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்த போது 50 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என 2023-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 3 காலக் கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை அரசு அளிப்பதை ஏற்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழக மக்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும்.

ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News