ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கும் தமிழக அரசு
- முதலமைச்சர் அரிட்டாபட்டி செல்ல இருப்பதால் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனத் தகவல் வெளியானது.
- தற்போது முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குடியரசு தினத்தையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ள ராஜ் பவனம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு ஒவ்வொரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போன்ற கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. நேற்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.
இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியானது.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அல்லது அரிட்டாப்பட்டியில் நாளை பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அரிட்டாபட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு செல்கிறார். சென்னையில் நாளை குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா முடிந்த பிறகு அரிட்டாபட்டி புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தேநீர் விருந்தை புறக்கணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். ஆளுநரின் தொடர்ச்சியான எதிர்மறை செயல்பாடு காரணமாக தமிழக அரசு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.