தமிழ்நாடு

அமித் ஷாவை கண்டித்து சென்னையில் வி.சி.க. நாளை ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

Published On 2024-12-27 05:23 GMT   |   Update On 2024-12-27 05:23 GMT
  • இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது.
  • சனாதனப் பிரிவினைவாதிகள் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ' எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என அம்பேத்கர் பெயரைச் சொல்வது இப்போது பேஷன் ஆக்கி விட்டது' என்று அம்பேத்கரை இழிவு படுத்திப் பேசினார். இதனால் நாடெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்திய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான தலித் அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து நாளை (28-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானித்து அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல இடதுசாரிக் கட்சிகள் 30-ந்தேதி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென முடிவு செய்துள்ளன.

இத்தனை போராட்டங்கள் எதிர்ப்புகளுக்குப் பின்னரும் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்தி வருகிறார்.


அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்களும்கூட புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை எண்ணற்ற முறை உச்சரித்தனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது 'தேசத் தந்தை' காந்தியடிகள் குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியாதோ அப்படித்தான் அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசும்போது, 'இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை' புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

இந்தியாவைப் போல ஜனநாயக அரசியல் முறையை ஏற்றுக்கொண்ட பல நாடுகள் இன்று துண்டு துண்டாகிச் சிதறுண்டு போய்விட்டன. ஆனால் சனாதன-சமூகப் பிரிவினைவாதிகளின் சதிகளையும் மீறி இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்றால் அதற்கு அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசமைப்புச் சட்டமே அடிப்படையாகும்.

இந்தச் சூழலில் இந்தியா கூட்டணி கட்சிகள் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று முழங்குவதோடு, அம்பேத்கரையும் உயர்த்திப் பிடிக்கின்றன. இது இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. அதன் காரணமாகத்தான் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட சனாதனப் பிரிவினைவாதிகள் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடு தான் அமித் ஷாவின் பேச்சாகும்.

அம்பேத்கர் ஒரு சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அரசமைப்புச் சட்டம் என்னும் அடித்தளத்தை அமைத்துத் தந்த மாபெரும் தலைவர். அவரை இழிவு படுத்துவது அரசமைப்புச் சட்டத்தை இழிவு படுத்துவதற்குச் சமம். புரட்சியாளர் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை-வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News