தூத்துக்குடி டைடல் பார்க்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
- மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
- அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வருகிறார்.
மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார்.
மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ரூ.32½ கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் தூத்துக்குடி சத்யா ரிசார்ட்சில் முதலமைச்சர் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறுவர்.
இந்த திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவிகளிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்துள்ளது.
மதியம் நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பிரதான சாலைகளின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் காமராஜ் கல்லூரியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கல்லூரி முன்பாக அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது.