சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் தொடங்கியது
- 2024-ம் ஆண்டிலும், இந்த ஆண்டிலும் ஆளுநர் உரையை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார்.
- நேற்று மறைந்த தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனால் 2023-ம் ஆண்டில், தமிழக அரசு கொடுத்த உரையை ஆளுநர் அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார். எனவே பேரவை விதிப்படி அந்த உரையை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரை, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
ஆனால் 2024-ம் ஆண்டிலும், இந்த ஆண்டிலும் ஆளுநர் உரையை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறினார்.
ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்ட அடுத்த நாளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை அரசு முன்மொழிவது வழக்கம். அந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் விவாதிப்பார்கள். அந்த விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலளிப்பார்.
ஆனால், ஆற்றாத உரைக்காக கவர்னருக்கு எப்படி நன்றி தெரிவிக்க முடியும்? எனவே ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு வருத்தத்தை பதிவு செய்துவிட்டு, அவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து வருகிறது.
சட்டசபையில் நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டசபை உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மறைந்த தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கியது. அவையில் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் உறுப்பினர் சு.ஜெகதீசன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.