தமிழ்நாடு

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு- பெரிய சூரியூரில் பிரமாண்டமான மைதானம், வாடிவாசல் தயாரானது

Published On 2025-01-13 13:03 IST   |   Update On 2025-01-13 13:03:00 IST
  • முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • கொம்புகளை பலப்படுத்துவதற்கான பயிற்சிகளும், சத்தான உணவுப் பொருட்களும், காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

துவாக்குடி:

திருவெறும்பூர் அருகே சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ந் தேதி மாட்டுப்பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீநற்கடல் குடி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல், ஜல்லிக்கட்டு திடல், பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் மொபட், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. திருவெறும்பூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காளைகளின் உரிமையாளர்கள் அவற்றுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார்கள். மாடுகளின் உடல்திறனை அதிகரிக்கும் வகையில் நீச்சல், நடை, மண் குத்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொம்புகளை பலப்படுத்துவதற்கான பயிற்சிகளும், சத்தான உணவுப் பொருட்களும், காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மண் குத்தும் பயிற்சி குறித்து மாட்டின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளையை அடக்க வரும் வீரர்கள் எளிதில் அடக்கி விடக்கூடாது என்பதற்காக மணல்மேடுகளில் காளைகளை விட்டு மாடுகளின் கொம்புகளால் மண்ணை குத்தி தூக்குவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அவ்வளவு எளிதில் காளை மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் மாட்டாது என்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டான பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் களத்திற்கு காளைகள் தயார் ஆவதை போல களத்தில் சந்திக்க காளையர்களும் தயாராகி வருகிறார்கள். இதை காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மக்கள். 

Tags:    

Similar News