- நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும்.
- ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாள் நன்மைகளை வழங்கட்டும்.
சென்னை:
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று வாழ்த்துகிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:-
உழைப்பின் உயர்வினை உலகிற்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் திருநாளை தமிழினத்தின் பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக கொண்டாடுவது மகிழ்ச்சியை தருகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தமிழ்நாட்டில் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாள் நன்மைகளை வழங்கட்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி:-
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருள் அகற்றப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். பொங்கல் விழாவை கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்:-
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. பிறந்திருக்கும் தை அனைத்து பகுதி மக்களின் நல்வாழ்விற்கான வழிகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்துத்துவா சக்திகளையும், சனாதன கூட்டங்களையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் பூமியில் அடியோடு முறியடிப்போம். தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
உழவுத்தொழிலை பாதுகாக்கும் வகையில், உழவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம். இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஏற்பட பொங்கல் வழி காட்டட்டும்.
முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுக்கரசர்:-
எல்லைக்கோடுகள் அனைத்தையும் கடந்த எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
அண்டை வீட்டார்களுடன் அன்பை பகிர்ந்து, தங்கள் இல்லங்களில் செய்த பலகாரங்களை பகிர்ந்து உண்டு, ஒருவருக்கொருவர் அன்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தி மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-
பொங்கல் கொண்டாடும் இந்த நன்னாளில் கார்கால குளிரும் மார்கழி பனியும் விலகி வாழ்வில் மாற்றம் வருவது போல் உலகத்தமிழர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என பொங்கலிடும் பொங்கல் போல் மகிழ்ச்சி பொங்கி நல்லறம் தழைத்தோங்க வாழ்த்துகள்.
இன்று பிறக்கின்ற "தைத்திருநாள்" உழவர்களுக்கு நலம் சேர்க்கும் ஆண்டாக அமைய வேண்டும். இயற்கை அன்னை, நமக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையான அளவு மழையை பொழிந்து, நாம் தண்ணீருக்காக எவரிடத்திலும் கையேந்தி நிற்காத தன்னிறைவு காண அருள வேண்டும்.
கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர்:-
இனி நடப்பதெல்லாம் நன்மையாக இருக்க சபதமேற்று, அரசியல் அறியாமை விலகி, இழந்த இட ஒதுக்கீடுகளை பெற்று, பழையன கழிந்து புதியன புகுந்து இனிவரும் காலம் நமதே என்ற முழு நம்பிக்கையோடு எதிர்கொள்ள இனிய பொங்கல் வாழ்த்துகள்.
இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன்:-
உழவு செழிக்கட்டும், உழவர்கள் மகிழட்டும், மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன், கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் ஆகியோர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.