பனையூரில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
- தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
- கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக கட்சி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகிறார்கள். எனவே கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை (ஜனவரி 10) தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.