தமிழ்நாடு
தேர்தலுக்கு ஆயத்தமாகும் விஜய்: இன்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்... குவியும் நிர்வாகிகள்

தேர்தலுக்கு ஆயத்தமாகும் விஜய்: இன்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்... குவியும் நிர்வாகிகள்

Published On 2025-03-28 07:37 IST   |   Update On 2025-03-28 07:37:00 IST
  • சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.
  • தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்கிறார்.

சென்னை:

கடந்த ஆண்டு கட்சியை தொடங்கிய விஜய் அதனை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலை கூட்டணி வைத்து சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து இந்த பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொதுக்குழுவுக்கு மாவட்ட அளவில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

இன்று காலை 9 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. இதையொட்டி பொதுக்குழு கூட்டம் நடக்கும் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையம் முழுவதும் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார்.

பகல் 11 மணியளவில் தீர்மானங்கள் வாசிக்கப்பட இருக்கிறது. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் இடம்பெற இருக்கிறது. கூட்டணி தொடர்பாக, நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் விஜய் 12 மணியளவில் பேசுகிறார்.

இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்கிறார்.

பொதுக்குழு நடக்கும் மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலில் 'கியூஆர் கோடு' ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனைவரும் கூட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் சென்னயில் குவிந்து வருகின்றனர்.

இதனிடையே கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக காலை 500 பேருக்கு பொங்கல், வடை, சட்னி, சாம்பார் மற்றும் டீ. மதிய விருந்தாக 2500 பேருக்கு 21 விதமான உணவு பரிமாறப்பட உள்ளது. 

Tags:    

Similar News