திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது... ஆட்சியிலும் அதை காட்டணும் - விஜய்
- ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா?
- அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் உரையாற்றினார்.
உரை தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம் என தெரிவித்து அவர் பேசியதாவது:-
* தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாம் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
* அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.
* காட்சிக்கு திராவிடம்.. ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்துற இவங்க நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா... மாநாட்டில் ஆரம்பித்தது... புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், 2-ம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் இப்படியெல்லாம் தடைகள். அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
* மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே...
* ஒன்றியத்தில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு நீங்க பண்றது என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சிதானே. ஒர கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழக தோழர்களையும், என் நாட்டு மக்களையும் பார்க்கறதுக்கும் சந்திக்குறதுக்கும் தடை போறது நீங்க யார்?
இவ்வாறு அவர் பேசினார்.