தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க.

Published On 2025-03-04 13:28 IST   |   Update On 2025-03-04 13:28:00 IST
  • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு.
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு.

மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற எம்.பி. தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என தகவல்கள் வெளியானது.

இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தன. ஆனால் மத்திய அமைச்சர் அமித் ஷா தொகுதிகள் குறைக்கப்படாது என்று கோவையில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை ( மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு வாருங்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக் கல்கவிஞர் மாளிகை 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்துக்கு வந்தார். அவர் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள அரங்கை நேரில் பார்வையிட்டார்.

ஒவ்வொரு கட்சிக்கும் அமைக்கப்பட்டுள்ள இருக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்பது பற்றி கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்றும் தமிழகத்தின் நலன் கருதியும் நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்க இருக்கிறார்.

Tags:    

Similar News