அண்ணா சாலையில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்- துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
- சேப்பாக்கம் திருவல்லிகேணி சிறு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஏசி பொருத்தப்பட்ட உடற்பயிற்சி கூடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் மேலும் 9 மினி அரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் 4.068 ஏக்கர் பரப்பளவில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தின் பயிற்சிக் கூட கட்டடம் 396 சதுர மீட்டர் பரப்பளவில் வரவேற்பு பகுதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள், பொருட்கள் வைப்பறை, மேலாளர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.
மேலும் சிறு விளையாட்டரங்கத்தில் திறந்த வெளி பார்வையாளர் மாடம் 265 நபர்கள் அமரும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் 2 கிரிக்கெட் டர்ப் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவற்றை திறந்து வைத்தார். முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாயும், 6 மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும், 3 மாதத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், மாதம் ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதலமைச்சர் திறந்து வைத்து கிரிக்கெட் டர்ப்பில் கிரிக்கெட் விளையாடினார். உடன் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி சென்னைசேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்றத் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 3 கோடி ரூபாயில் கட்டுப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம். மொத்தமாக இன்று 12 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் அரசு சார்பாக விளையாட்டுத்துறை சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.
அதே போல மதுரை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 50 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்கள். மீதம் உள்ள தொகையை அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சேப்பாக்கம் திருவல்லிகேணி சிறு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஏசி பொருத்தப்பட்ட உடற்பயிற்சி கூடமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்கி, 2 கிரிக்கெட் டர்ப் பார்வையாளர்கள் மாடம் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தில் உள்ளது என தெரிவித்தார். மற்ற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் நடைபெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மேலும் 9 மினி அரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 22 மினி அரங்கம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைந்தது 25 மினி அரங்கம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளோம். அந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க உள்ளோம்.
இந்த விளையாட்டு அரங்கத்தை விளையாட்டு வீரர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.