துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிப்பார் - யுஜிசி புதிய விதியில் தகவல்
- இந்தக் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரைக்கும்.
- துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம்.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் கவர்னர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இந்தக் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை கவர்னர் நியமிப்பது வழக்கம். இந்தச் சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால், துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான கவர்னரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புதிய விதியில், தலைவராக கவர்னர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள். மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.