கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்
- “என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை” என்று எம்.ஜி.ஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
- எங்களுக்குள் அரசியலுக்கு அப்பாற்பட்டதோர் இணக்கமான நட்பு பேணப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தளகர்த்தர்களில் ஒருவரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. முதல் மாவட்டச் செயலாளர் என்கிற பெருமைக்குரிய வருமான ஆருயிர்ச் சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமது 26-வது வயதிலேயே ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணி ஆற்றியவர்.
"என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை" என்று எம்.ஜி.ஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
1980-களில் நானும், அவரும் மாவட்ட அரசியலில் எதிரும் புதிருமாகப் பணியாற்றிய நெருப்புப் பொறி பறந்த காலகட்டத்தில்கூட எங்களுக்குள் அரசியலுக்கு அப்பாற்பட்டதோர் இணக்கமான நட்பு பேணப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்.
50 ஆண்டு காலமாக நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் சிறந்ததோர் ஆளுமையாக வலம் வந்து, நெல்லைச் சீமைத் தொண்டர்களால் "நெல்லை நெப்போலியன்" எனப் போற்றப்பட்ட சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு ம.தி.மு.க. சார்பில் ஆர்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.