விஜய் அரசியல் வருகை பற்றி பேசி நட்பை கெடுக்க விரும்பவில்லை- வைரமுத்து
- திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்யும் விவகாரம் கவலை அளிக்கிறது.
- அரசியல், ஆன்மீகம் ஆகியவை ஒன்றாக போய்விட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் செயல்படும் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளிக்கு வந்த கவிஞர் வைரமுத்துவை பள்ளி மாணவர்கள் கிராமத்து வழக்கப்படி சிலம்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் ஆகிய பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்யும் விவகாரம் கவலை அளிக்கிறது.
இப்போது அரசியல், ஆன்மீகம் ஆகியவை ஒன்றாக போய்விட்டது. அரசியலுக்குள்ளும் ஆன்மீகம் இருக்கிறது. ஆன்மீகத்திற்குள்ளும் அரசியல் இருக்கிறது. இதைத்தான் உலகம் தற்போது நம்பிக் கொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்த வரை இந்து மதத்தினரின் வாழ்க்கை முறை வேறு, இஸ்லாம் மதத்தினரின் வாழ்க்கை முறை வேறு, அவரவர்களின் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொள்ள அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதனை செய்து தரும் கடமை அரசுக்கு உண்டு என்பதே எனது கருத்து.
கலைத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களே. அந்த வகையில் விஜய் மீது எனக்கு அதிக நட்பு உண்டு. அரசியல் குறித்தான கருத்துக்களை கூறி நான் யாரையும் பகைக்க விரும்பவில்லை. உண்மையை சொல்லாமல் நான் பொய்யனாகவும் ஆக விரும்பவில்லை, நட்பை கெடுக்கவும் விரும்ப வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.